வடகிழக்கு மாகாணத்தில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் மக்களுடைய காணி
அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாக நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு கோரி த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலநாதன், காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் அவர்களுக்கு
கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தங்களின் மேன்மை தாங்கிய கவனத்திற்கு கொண்டு வரும் விடயம் யாதெனில்,
வட கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு
அவர்களுயை காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டுகாலமாக
வழங்கப்படாமல் இருக்கின்றன.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களின்
கீழ் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு எந்தவித உதவிகளும்
வழங்கப்படவில்லை.
குறிப்பாக வீட்டு மானியம் மற்றும் வீட்டுக்கடன் போன்றவை
வழங்கப்படவில்லை. இந்த துக்ககரமான நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி
மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். காரணம் இதற்கோர் தீர்வு
இன்னும் யாராலும் முன்வைக்கப்படவில்லை.
எனவே இந்த விடயத்தை அவசரமாக பரிசீலனை செய்து உடன் நடவடிக்கை
எடுக்குமாறு மேற்படி கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
குறிப்பிட்டிருந்தார்.