சென்ற மாதம் 28 ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள பொடெஸ்ரா
குழுமத்தின் (The Podesta Group) பரப்புரைக் காரியாலயத்தில் நடைபெற்றதாகக்
கூறப்படும் இச்சந்திப்பில் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் வண.
பிதா சீ.யோ. இம்மானுவெல் அடிகளார் அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை (United
States Tamil Political Action Council) தலைவர் எலியஸ் ஜெயராசா, திருமதி
கிறேஸ் புஸ்பராணி வில்லியம்ஸ் மற்றும் பேரவையின் பேச்சாளர் சுரேன்
சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏ.ஈ.ஐ. (American Enterprise Institute) என்கிற அமைப்பின்
உப தலைவியும் தூர கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய வெளியுறவுக் கொள்கைக்கான
அமெரிக்க செனட் குழுவில் 10 வருடங்களாக (Danielle Pletka) அம்மையாரால்
ஜீ.ரி.எவ் பிளேக் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இக்கலந்துரையாடலில் இலங்கையின் வடக்கு கிழக்குப்
பிரதேசங்களில் வாழும் மக்களின் அவல நிலை மற்றும் தமிழ்த் தேசியக கூட்டமைப்பு
வட்டாரங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக
உலகத் தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.
இது குறித்து, தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்துத்
தெரிவித்த பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், துணை இராஜாங்கச் செயலர்
றொபேர்ட் ஓ பிளேக்கை சந்திக்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் தாம்
கலந்துரையாடியதாகக் கூறியிருந்தார்.
மக்களின் அவலநிலை, கூட்டமைப்பின் அறிக்கை என்பதற்கும்
அப்பால் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட
மூவரடங்கிய போர் குற்ற விசõரணைக்கான ஆலோசனைக் குழுவின் செயற்பாடுகள்
பற்றியும் பேசப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க
ஆணைக்குழுவின் செயற்பாடுகள், சர்வதேச மனித உரிமை மற்றும் நீதி குறித்த
நியமங்களுக்கு இசைவாகவும் பொருந்தக் கூடிய வகையிலும் அமையாவிட்டால் சுயாதீன
அனைத்துலக விசாரணையொன்றின் அவசியம் வலியுறுத்தப்படுமென றொபேர்ட் ஓ பிளேக்
அண்மையில் வெளிப்படுத்திய கருத்தினை கவனிக்க வேண்டும்.
காத்திரமான புதிய போர்க் குற்ற ஆவணங்கள் தமக்குக்
கிடைத்திருக்கின்றன என்கிற செய்தியும் பிளேக்கினால் அதில் கூறப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு
தினம் நெருங்கும் இவ்வேளையில் புதிய சான்றுகளும் உலகின் முன் பார்வைக்கு
வைக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமிருப்பதை அமெரிக்காவும் புரிந்து
கொள்ளும்.
விமர்சனத்திற்குள்ளான, இந்திய காங்கிரஸ் தலைவி
சோனியாகாந்தி உடனான உலகத் தமிழர் பேரவையினரின் சந்திப்பும் அதையடுத்து
அமெரிக்க அரசின் உயர் நிலை அதிகாரியான றொபேர்ட் ஓ பிளேக்குடன் நடத்திய
பிரத்தியேக சந்திப்பும் ஒரே நிகழ்ச்சி நிரலிற்குள் உள்ளடக்கப்பட்ட
சம்பவங்கள் போல் தோன்றுகின்றன.
பிரித்தானியாவில் நடைபெற்ற உலக தமிழர் பேரவையின் அறிமுக
நிகழ்வில் அன்றைய பிரதமர் கோடன் பிறவுண் கலந்து கொண்டமையும் நீண்ட கால
இடைவெளியின் பின்னர் இந்திய அரசியலின் முதன்மைச் சக்தியாக விளங்கும் சோனியா
காந்தி உடன் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வமற்ற 11 நிமிட சந்திப்பும்
இன்னமும் மத்திய கிழக்கில் ஐரோப்பாவில் தென் கிழக்கு ஆசியாவில் படைத்துறை
மற்றும் பொருண்மிய ஆதிக்கத்தில் தீர்மானகரமான இயங்கு சக்தியாக நீடிக்கும்
அமெரிக்காவின் ஆசியாவிற்கான பிரதிநிதி றொபேர்ட் ஓ பிளேக்குடன் அண்மையில்
சந்தித்த விவகாரமும் உற்று நோக்கப்பட வேண்டும்.
தெற்காசிய அரசியலில் இந்தியாவின் வகி பாகத்தை நிராகரிக்க
விரும்பாத மேற்குலகம் இலங்கை விவகாரத்தில் அக்கறை செலுத்தும் சக்திகள்
அப்பிராந்தியம் குறித்தான இந்திய அமெரிக்க பொதுத் தளத்தினுள் இசைந்து
பயணிக்க வேண்டுமென விரும்புகிறது.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை
ஐ.நா. சபையால் முன்னெடுக்கப்படும் போர்க் குற்ற விசாரணை பற்றி அதிக கரிசனை
கொள்வதோடு போரினால் பாதிப்புற்ற தாயக மக்களின் இயல்பு வாழ்க்கை மீட்சி
குறித்து சர்வதேச அழுத்தமொன்றினை எதிர்பார்க்கின்றார்கள்.
இருப்பினும் மேற்குலகும் இந்தியாவும் இறுதிப் போரில்
நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று
மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் நழுவல் போக்கினைக் கடைப்பிடித்து
விடுமோவென்கிற சந்தேகமும் புலம்பெயர் சமூகத்திடம் உள்ளது.
2005 இல் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிணைந்த பாதுகாப்பு
சங்கத்தினால் (European Corporate Security Association- ECSA) கடந்த மார்ச்
23 ஆம் திகதியன்று பிரசில்ஸ் இல் கூட்டப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அவர்கள்,
புலம்பெயர் ஈழத் தமிழ் அமைப்புக்கள் மீது பலத்த கண்டனங்களை முன்வைத்துள்ளார்.
அதாவது இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் பிரிவினையை
விரும்பும் புலம்பெயர் தமிழ் சமூகமா அல்லது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
வசிக்கும் அரசுடன் இணைந்து செயலாற்றும் தமிழர்களா தாயக மக்களுக்காக பேசும்
உரித்துடையவர்கள் என்பது தொடர்பாக மேற்குலகம் முடிவெடுக்கும் காலம்
அண்மித்து விட்டதாக ரவி நாத் ஆரியசிங்கா அக் கருத்தரங்கில் கேள்வி
எழுப்பியுள்ளார்.
உலகத் தமிழர் பேரவையை புலம்பெயர் ஈழத் தமிழ் மக்களின்
சார்பாகப் பேசும் வல்லமை கொண்ட தலைமைச் சக்தியாக மேற்குலகம் ஏற்றுக் கொண்டு
விட்டதென சிங்களம் கணிப்பிடுவதை ஆரியசிங்கவின் சீற்றம் எடுத்துக்
காட்டுகிறது.
இவை தவிர புலம்பெயர் தேசத்தில் விடுதலைப் புலிகளின்
முன்னணி அமைப்புக்களை வழி நடத்தும் நெடியவன் அதன் பிரசாரப் பொறுப்பாளர்
ஜெயச்சந்திரன் (தமிழ் நெற் ஆசிரியரைக் குறிப்பிடுகின்றார்) மற்றும் உலகத்
தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் ஆகியோர் ஐரோப்பாவில் இருந்து
செயற்படுவதாக குறிப்பிடும் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, நாடு கடந்த தமிழீழ
அரசாங்கம் இரண்டு அணிகளாக பிளவுற்று இருப்பதாகவும் கூறுகின்றார்.
தமிழ் மக்களின் பரப்புரைகளால் இலங்கையின்
அபிவிருத்திக்கான பொருளõதார உதவிகளை ஐரோப்பிய நாடுகள் இடை நிறுத்தி
இருப்பதோடு விடுதலைப் புலிகளுக்குச் சார்பான புலம்பெயர் முன்னணி
அமைப்புக்கள் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையில் சிதைவினை
ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்துகின்றார்.
ஆகவே ஈழத்தமிழர்களுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையே
பாரிய இடைவெளியை உருவாக்க ஆரியசிங்க பெரிய அளவில் முயன்றிருக்கிறார்
என்பதையே இப் பேச்சுக்கள் உணர்த்துகின்றன.
ரவிநாத் ஆரியசிங்க போன்று சர்வதேச விவகாரம் மற்றும்
பயங்கரவாத தடுப்பு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் விரிவுரையாளர் றோகான்
குணரெட்னாவும் புதிய அறிவுரைகளை இலங்கை அரசிற்கு வழங்கி வருவதையும் கவனிக்க
வேண்டும்.
மேற்கு நாடுகளிலுள்ள ஈழத் தமிழர் அமைப்புக்களைக்
கட்டுபபடுத்தும் படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ரவிநாத் ஆரியசிங்க
வலியுறுத்தும் அதேவேளை, உலகளவில் அதிகளவான அரச சார்பற்ற நிறுவனங்களை
உருவாக்கி மனித உரிமை அமைப்புக்களினூடாக புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்கள்
மேற்கொள்ளும் அரசிற்கெதிரான போராட்டங்களை முறியடிக்கவேண்டுமென இலங்கை
ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார் றோகான் குணரட்ன.
அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் (NGO) என்கிற போர்வையில்
அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்குள் ஊடுருவ முடியுமென்பதையே இவர்
சுட்டிக் காட்டுகின்றார்.
இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு மற்றும் மனித உரிமை
மீறல்கள் குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் அனைத்துலக
மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக் குழு
(International Crisis Group) போன்றவற்றையே றோகான் குணரெட்ன குறி
வைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது இலகுவானது.
இவை தவிர, புலம்பெயர் தமிழ் மக்களுடன் தொடர்பினை
ஏற்படுத்த வேறொரு தரப்புத் தேவையில்லையென நோர்வே அபிவிருத்தி அமைச்சர்
எரிக்சொல்ஹெய்ம் அவர்களை மறைமுகமாகச் சாடும் ஜாதிக ஹெல உறுமையைச் சார்ந்த
பிரதியமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ்
மக்களுக்கும் அரசிற்குமிடையே ஏற்கனவே சந்திப்புக்களும் பேச்சுவார்த்தைகளும்
இடம்பெற்று வருவதாகக் கூறுகின்றார்.
ஆகவே அரச தரப்பினர் முன்னெடுக்கும் இவ்வாறான பரப்புரைகள்,
ஈழத்தமிழ்ச் சமூகத்தை சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படுத்த
மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே பார்க்க வேண்டும்.
சிங்களத்தின் பார்வை, தற்போது உலகத் தமிழ் பேரவையின்
செயற்பாடுகளை நோக்கிக் குவிந்திருப்பதைக் காணலாம்.
போர்க் குற்ற விசாரணைகளைத் தீவிரப்படுத்த பேரவை
மேற்கொள்ளும் நகர்வுகள் யாவும் ஆட்சியாளர்களின் அதிகார இருப்பிற்கு சவாலாக
இருக்கப் போகிறது.
புவிசார் அரசியலில் ஏற்படும் சடுதியான மாற்றங்களை உள்வாங்கி, சரியான
இராஜதந்திர நகர்வுகளை பேரவை மேற்கொள்ளுமாவென்பதைப் பொறுத்திருந்து பார்க்க
வேண்டும்.
இதயச்சந்திரன்