நேற்று சனிக்கிழமை இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய
உலகக் கிண்ண இறுதிப் போட்டியினைத் தொடர்ந்து ஹட்டனில் மலையக இந்திய
வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து கும்பல்
ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
சமநலகம, ஹிஜ்ரா புர பிரதேசங்களில் பல வீடுகள் இதனால்
சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் டிக்கோயா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காடையர் கூட்டமொன்று பட்டாசு வெடிகளை தமிழர்களின்
வீடுகளுக்குள் கொளுத்தி வீசி விட்டுப் பின்னர் உட்புகுந்து தாக்குதலிலும்
ஈடுபட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்
ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் சிங்களவர்கள் எவரும்
இருக்கவில்லையெனக் கூறிய தொண்டமான், இனவாதத்தை தூண்டி முரண்பாடொன்றை
தோற்றுவிக்கும் தீய எண்ணத்திலேயே அந்தக் கும்பல் செயற்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பிபிசிக்குக் கருத்து தெரிவித்த இலங்கைப் பொலிஸ்
பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர்
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.