வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

விடுதலையாகும் முன்னாள் போராளிகளை சில காலங்களுக்கு நாம் கண்காணித்தே வருகின்றோம்! - ஹத்துருசிங்க செவ்வி
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 04:07.24 PM GMT ]
 
விடுதலையாகும் முன்னாள் போராளிகளை சில காலங்களுக்கு நாம் கண்காணித்தே வருகின்றோம்! - ஹத்துருசிங்க செவ்வி
விடுதலையான முன்னாள் போராளிகளை சில காலங்களுக்கு கண்காணித்தே வருகின்றோம். காரணம், மீண்டும் அவர்கள் தேவையற்ற வழிகளை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கின்றார்களா என்பது குறித்தே நாம் சில காலங்களுக்கு கண்காணித்து வருகின்றோம். என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

 
தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செவ்வியின் முழு விபரம் பின்வருமாறு:-

கேள்வி:- யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளும் அதில் இராணுவத்தினரின் பங்களிப்பும் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது?

பதில்:- யாழ். குடாநாட்டின் அபிவிருத்திப் பணிகள் 'வடக்கின் வசந்தம்' வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டமானது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கையோடு ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தை விடவும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களே பாரிய அழிவுகளைச் சந்தித்தன. இருப்பினும் இந்த யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்துக்கான அபிவிருத்திகள் எதுவும் நடைபெறாது முடக்கப்பட்டன என்பதே உண்மையாகும். அவ்வாறு முடக்கப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அபிவிருத்திக்கு முக்கியமானது கல்வியே. அந்தக் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் காணப்படும் பிரதேசங்களில் யாழ்ப்பாணம் முதலிடம் வகிக்கும் அதேவேளை, மீன்பிடி, விவசாயம் போன்ற துறைகளிலும் யாழ்ப்பாணம் முக்கிய இடம் பிடித்துள்ளது. கொழும்பு மற்றும் தம்புள்ள சந்தைகளில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுசெல்லப்படும் மரக்கறிகளே காரணம் என்பது மறுப்பதற்கில்லை.

தற்போது ஒருநாளைக்கு சுமார் 20 – 25 மரக்கறி லொறிகள் யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கை நோக்கிப் பயணிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மரக்கறி லொறிகள் மாத்திரமே பயணித்தமை குறிப்பிடத்தக்கது. மீன்பிடித்துறையும் அவ்வாறே. அந்தளவுக்கு யாழ்ப்பாணம் பொருளாதார முறைமையிலும் அபிவிருத்தியிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.

கேள்வி:- கண்ணிவெடிகள் யாவும் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதான இராணுவ தளபதியின் கூற்றின் உண்மைத் தன்மை என்ன?

பதில்:- அவரது கூற்று முற்றிலும் உண்மையானது. யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் தங்கியுள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. கொழும்புத்துறை, அரியாலை, தனங்கிளப்பு போன்ற பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் யாவும் அண்மைக் காலங்களிலேயே அகற்றப்பட்டன.

இந்நிலையில், யாழ். நகரம் மற்றும் அதனை அண்மித்த பொதுமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்கள் அனைத்தும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தவகையில், யாழ். குடாநாட்டில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் 99 வீதமளவில் பூர்த்தியடைந்துள்ளன எனக் கூறலாம். எஞ்சியுள்ள ஒரு வீதம் முகமாலை பிரதேசத்தையே உள்ளடக்குகின்றது. அங்கு தற்போது கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து வெளிநாட்டு அமைப்புக்கள் சிலவும் ஈடுபட்டு வருகின்றன. இராணுவத்தின் சார்பில் சுமார் 300 அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கண்ணிவெடி அகற்றலுக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு அமைப்பினரை விடவும் இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் முற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பங்களிப்பு இதில் முக்கிய இடம் வகிக்கின்றது.

கேள்வி:- யாழ். பிரதேசத்தில் பொதுமக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எந்தளவுக்கு பூர்த்தியடைந்துள்ளன?

பதில்:- குடாநாட்டில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியை எட்டியுள்ளன. இன்னும் 333 குடும்பங்களைச் சேர்ந்த 1,506 பேர் மாத்திரமே மீள்குடியேற்றப்படவுள்ளனர். அவர்களும் சுமார் ஒன்றரை மாதங்களுக்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவர். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் இல்லை.

கேள்வி:- யாழ். மக்களின் வாழ்வாதார நிலைமையில் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?

பதில்:- குடாநாட்டைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடி மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரத்திலேயே தங்கியுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த நிலையில், இம்மக்கள் தங்களது துறையினை மேலும் வளர்த்துக்கொண்டு செல்வதுடன் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.

மீன்பிடிதுறை என்று நோக்கும் போது, இந்து சமுத்திரத்தில் எமது நாட்டுக்குரிய பகுதி முழுவதும் எமது மீனவர்களுக்கே சொந்தம். இந்திய மீனவர்களின் பிரச்சினை இல்லையென்றால் முழு சமுத்திரத்திலும் எமது மீனவர்கள் மீன்பிடிக்க முடியும். தவிர மீனவர்களுக்கு தேவையான ஏனைய உதவிகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. பாதுகாப்பு தரப்பினரும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளனர்.

இதேவேளை, பொதுமக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், குடாநாட்டின் பல பகுதிகளிலும் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் போன்றன அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக யாழ். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி:- யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு கெடுபிடி காணப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான உங்களது பதில் என்ன?

பதில்:- இராணுவத்தினரை வீதிகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தேவை எமக்கு இல்லை. அதற்கு நாம் விரும்பவுமில்லை. காரணம் இப்போது நாட்டில் யுத்தம் இல்லை. அதனாலேயே கடந்த வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதக் காலங்களில் வீதிகளில் பாதுகாப்பு கடமைகளுக்கென நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரை அகற்றினோம்.

இருப்பினும் அடுத்த நவம்பர் - டிசெம்பர் மாதக் காலங்களில் குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின. கொலை, கொள்ளை, நகைகளைப் பறித்துச் செல்லல், பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்துதல் என பலவாறான குற்றச்செயல்கள் இடம்பெறத் தொடங்கின. அதனால் சில பிரதேசங்களில் மீண்டும் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கேள்வி:- இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் யாவர்?

பதில்:- யுத்தத்தில் தோல்விகண்ட சில அரசியல்வாதிகளின் தலைமையிலேயே இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெற்றன. இவர்களில் ஒருவர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு சாட்சிகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் உரிய விசாரணைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். வெகுவிரைவில் அவரை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை, மேற்படி அரசியல்வாதிகளே யாழ். மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், யாழில் தொடரும் இராணுவ பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் இவ்வாறான அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் மக்களிடையே மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஒரு சமூகத்தில் ஐந்தாறு பேராவது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களில் சிலரே மேற்படி கொள்ளை மற்றும் நகைத் திருட்டு போன்ற சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு குற்றச்செயல்கள் இடம்பெற்றபோதும் கூட பொதுமக்கள் - பொலிஸாரிடம் முறைப்பாடுகளைச் செய்யவில்லை. இராணுவத்தினரே தமக்கு வேண்டும், அவர்களே எமது பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பார்கள் என மக்கள் வேண்டினர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற குற்றச் செயல்களை அடுத்து மீண்டும் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபட வைக்குமாறும் இரவு 10 மணிக்கு பின்னர் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் யாழ். மக்களும் அவர்களின் பிரதிநிதிகளுமே கோரினர். அவர்களின் கோரிக்கைகளுக்கமைவாகவே இராணுவத்தினர் மீண்டும் வீதிகளில் நிறுத்தப்பட்டனர்.

கேள்வி:- உங்களது இந்த பாதுகாப்பு நடவடிக்கையை அடுத்து குற்றச்செயல்களின் எண்ணிக்கைகள் குறைவடைந்துள்ளதா?

பதில்:- ஆம்... நிச்சயமாக. யாழ்;ப்பாணத்தில் இடம்பெற்றுவந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கை தற்போது பூச்சியமாக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெருமளவிலானோர் இராணுவத்தினராலேயே கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சில குற்றச்செயல்கள் இடம்பெற்று இரு மணித்தியாலங்களுக்குள் கூட சந்தேகநபர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டும் உள்ளனர். இவ்வாறான துரித நடவடிக்கைகள் காரணமாகவே பொதுமக்கள் இராணுவத்தினர் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கேள்வி:- யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு யாழ்ப்பாணத்தில் இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரிக்கக் காரணம் யாது?

பதில்:- யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் நடைபெறக்கூடிய சூழ்நிலை இல்லை. பொய் வதந்திகளே இவை. புலம்பெயர் தமிழர்களே இவ்வாறான கதைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அவர்கள் யாழ். மக்களின் பிரச்சினைகளுடனேயே வாழ்பவர்கள். யாழ். மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

உருத்திரகுமாரன், நெடியவன் போன்றவர்கள் யாழ். மக்களின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே நிதி சேகரிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். யாழ். மக்களின் பிரச்சினை என்று கதைக்கும் அளவுக்கு அவர்களுக்கு இலாபம். அதனாலேயே யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவற்றுக்கு இராணுவத்தினரே காரணம் என்றும் அவர்கள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருங்கள். அவ்வாறு செய்தால் ஆயிரக்கணக்கான டொலர்களை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம் என்றெல்லாம் ஒருசிலருக்கு தகவல்கள் பரிமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் கண்டறிந்து விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இதுவே யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை. இவ்வாறானதொரு நிலையிலேயே மக்களை நாம் பாதுகாத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து வருகின்றோம். உண்மையில் இங்கு பாதாள உலகக் கோஷ்டி நடவடிக்கைகள் இடம்பெறுவதில்லை. அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதுமில்லை.

கேள்வி:- யாழ். மக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையிலான தொடர்பு எத்தகையது?

பதில்:- இங்குள்ள மக்கள் இராணுவத்தினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்கள். இரு தரப்பினருக்கும் இடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. கொழும்பிலுள்ள மக்களை விடவும் யாழ். மக்கள் மிகவும் சந்தோஷமாகவே வாழ்கின்றனர். கொழும்பிலுள்ள மக்களை விடவும் இங்குள்ள மக்களே மிகவும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இதுவொரு பாரிய மாற்றமாகும். அதையே மக்களும் நாமும் எதிர்ப்பார்க்கின்றோம்.

இருப்பினும், சுரேஷ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தினர் மீதே தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்துக்கு எதற்கு பெருமளவில் இராணுவத்தினர்? என கேள்வி எழுப்புகின்றனர். ஏன் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதில்லை? என்று கேட்கின்றனர்.

இருப்பினும் இங்குள்ள மக்கள் பொலிஸாரை விடவும் இராணுவத்தினர் மீதே நம்பிக்கை கொண்டுள்ளனர். இது பொலிஸார் மீதான தவறு அல்ல. காரணம் கடந்த சில வருடங்களாகவே இராணுவத்தினருடனேயே பொதுமக்களின் தொடர்புகள் காணப்பட்டன. அதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே எதற்கெடுத்தாலும் அவர்கள் இராணுவத்தினரிடம் ஓடி வருகின்றனர். வீட்டில் கணவர் - மனைவிக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளக்கூட இராணுவ முகாமை நோக்கி ஓடுகின்ற நிலைமையே இங்குள்ளது.

இதேவேளை, இராணுவத்தில் எங்கும் இல்லாத 'ஒற்றுமை' எனும் பிரிவொன்றை இங்கே நாம் அமைத்துள்ளோம். இந்த பிரிவானது வசதி படைத்த குடும்பம் முதல் பின்தங்கியுள்ள கிராமமொன்றின் மிகவும் கஷ்டப்படும் குடும்பம் வரையில் தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த 'ஒற்றுமை' பிரிவுடன் இணைந்தே பொதுமக்கள், இளைஞர் யுவதிகள், மதத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இணைந்து பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேள்வி:- புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள், சமூகத்தோடு எந்தளவில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்? அவர்களின் இயல்பு வாழ்க்கை மீளப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா?

பதில்:- சிறந்த பயிற்சிகளைப் பெற்று வெளியேறும் முன்னாள் போராளிகள் தற்போது பல்வேறு தொழில் வாய்ப்புக்களையும் பெற்று சிறந்த வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சிலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். மேலும் சிலர் திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் விடுதலையாகும் முன்னாள் போராளிகளை சில காலங்களுக்கு நாம் கண்காணித்தே வருகின்றோம். காரணம், அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் பயன்மிக்கவையா? அவர்கள் எந்தளவில் பயிற்சிகள் மூலம் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்? மீண்டும் அவர்கள் தேவையற்ற வழிகளை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கின்றார்களா என்பது குறித்தே நாம் சில காலங்களுக்கு கண்காணித்து வருகின்றோம்.

தவிர, இங்கு சில சமூகப் பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன. காரணம், விடுதலைப் புலிகள் இயக்கமானது ஜாதிப் பிரச்சினைக்கு அப்பாற் சென்று செயற்பட்ட இயக்கமாகும். இயக்கத்தில் உள்ளவர்களுக்குள் இந்த ஜாதி, மத பேதங்கள் காணப்படவில்லை. அந்த ஜாதிப் பிரச்சினைக்கு எதிராகவே அவர்கள் செயற்பட்டார்கள். அதனால் இயக்கத்தில் இருக்கும்போதே கலப்புத் திருமணங்கள் பலவும் இடம்பெற்றன. இவ்வாறிருக்க- யுத்தத்தின்போது பெருமளவிலான போராளிகள் உயிரிழந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் சமாதானமும் நிலவியது.

இருப்பினும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் மனைவிமாரை ஏற்க அவர்களின் குடும்பத்தினர் மறுக்கின்றனர். வேற்று ஜாதிக்காரரை மணந்ததற்காக பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் அவர்களை ஒதுக்கி வைத்துள்ளனர். இவ்வாறானதொரு மாபெரும் சமூகப் பிரச்சினையை இந்த யாழ். மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க இராணுவத்தினராலும் முடியவில்லை. அதற்கான தீர்வு குறித்து நாம் இன்னமும் கலந்துரையாடியே வருகின்றோம்.

கேள்வி:- யாழில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் முன்னாள் போராளிகள் தொடர்புபட்டிருக்கின்றனர் எனும் செய்தி பரவியிருந்ததுடன் பொதுமக்களுக்கும் அவர்கள் குறித்து சந்தேகம் எழுந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றதே. இதன் உண்மைத்தன்மை என்ன?

பதில்:- உண்மையில் முன்னாள் போராளிகளுக்கும் இந்த குற்றச்செயல்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவர்கள் மிகவும் கவலைக்குள்ளாகியிருந்தனர். அவர்களில் ஓரிருவர் சிற்சில திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டனர். வாழ்வாதாரத்தைத் தேடவே இவ்வாறான திருட்டுக்களை அவர்கள் மேற்கொண்டார்களே தவிர புலிகள் இயக்கத்தை மீண்டும் கண்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை.

மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்க வேண்டும், படையினருடன் போரிட்டு வெற்றிகாண வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு எண்ணமில்லை. யுத்தம் போதும் என்ற மனநிலைகளிலேயே அவர்கள் இருக்கின்றனர். அவர்களால் இனிவரும் காலங்களில் பிரச்சினைகள் ஏற்படப்போவதில்லை.

கேள்வி:- மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதன் உண்மை நிலை என்ன?

பதில்:- மீண்டும் யுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சிலரும் சிற்சில இடங்களில் உள்ளனர். விஷேடமாக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியனவே இவ்வாறான எதிர்ப்பார்ப்புக்களுடன் செயற்பட்டு வருகின்றன. இவை தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதுமாத்திரமன்றி இவர்கள் தங்களது அரசியல் இலாபத்துக்காக யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கெடுபிடி அதிகம், இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்றெல்லாம் கூறி பொதுமக்களைக் குழப்பத்துக்குள்ளாக்கி வருகின்றனர்.

எம்மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் எங்களிடம் நேரடியாக முன்வைப்பதும் இல்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவித்து அதனூடாக புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கையின் பிரச்சினைகளை வைத்தே அரசியல் நடத்திவரும் சில தமிழக அரசியல்வாதிகளுக்கும் தகவல்களை வழங்கி அவர்களையும் இலங்கைக்கு எதிராக தூண்டிவிடுகின்றார்கள்.

ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இராணுவத்தால் 1,489 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளமை குறித்து அவர்களில் ஒருவர் கூட கதைப்பதில்லை. அத்துடன், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்தோ அல்லது இதனால் பாதிக்கப்பட்டு உண்ண உணவின்றி தவிக்கும் வடக்கு மீனவர்கள் பற்றியோ அவர்கள் கதைப்பதில்லை. நாடாளுமன்றத்தில் கூட இதற்கு எதிராகக் குரல் எழுப்புவதில்லை.

இவை குறித்து கதைப்பதற்கு எவரும் இல்லை. இராணுவம் அதிகம், வெள்ளை வான் பிரச்சினை போன்றன குறித்தே அவர்கள் தொடர்ந்தும் கதைத்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். வெள்ளை வானில் வந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்தோ அல்லது இராணுவம் செய்யும் நன்மைகள் குறித்தோ அவர்கள் தேடிப் பார்ப்பதில்லை. சில ஊடகங்களும் அவர்களுக்கு ஏற்றவகையில் ஒத்தூதுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தினராலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மறுப்பதற்கில்லை. அவற்றுக்கெதிராக நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கேள்வி:- பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளின் போது இராணுவத்தினர் கெடுபிடிகளை விதித்ததாகக் கூறப்படுகின்றதே. அது உண்மைதானா?

பதில்:- பார்வதி அம்மாள் என்பவர் எம்மைப் பொறுத்தவரையில் ஒரு தாய், நோயாளி. அவ்வாறானொருவர் உயிரிழந்திருக்கும் நிலையில் அவருடைய சடலத்துக்கு அவமரியாதை செய்ய வேண்டிய தேவை இராணுவத்துக்கு இல்லை. அவ்வாறிருக்க எதற்காக நாம் கெடுபிடிகளை விதிக்க வேண்டும்?

அத்துடன் அவருடைய சடலம் எரியூட்டப்பட்ட சாம்பரை அகற்றியதாகவும் அப்பகுதியிலிருந்த நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்கூட இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் நாம் அவ்வாறு செய்வதால் எமக்கு என்ன இலாபம்? சரி, நாம் அப்படி செய்தோம் என்பதற்கு சாட்சியேனும் உண்டா? ஒரு புகைப்படமாவது ஊடகங்களில் வெளியிடப்பட்டதா? சில வெளிநாட்டு ஊடகங்கள் மாத்திரம் கிராபிக்ஸ் செய்யப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தன. அவை உண்மையானவையாக இருந்தால் உள்ளூர் ஊடகங்கள் அவற்றைப் பிரசுரித்திருக்க வேண்டும் அல்லவா?

இராணுவத்தினர் மீது சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களே இவ்வாறான பொய் வதந்திகளைப் பரப்பிவிடுகின்றனர். நாங்கள் சிங்கள பௌத்த மக்கள். தமிழ் மற்றும் சிங்கள கலாசாரங்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றன. எல்லா மதங்களும் நன்மைகளையே போதிக்கின்றன. அவ்வாறிருக்க இவ்வாறான கீழ்த்தனமான வேலைகளைச் செய்யவேண்டிய அவசியம் இராணுவத்துக்கு இல்லை.

கேள்வி:- தமிழர் பிரதேசங்களில் விகாரைகளை நிர்மாணிப்பதான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றதே?

பதில்:- இதுவும் ஒரு பொய் வதந்தியே. அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது என்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் நாங்கள் இங்கிருந்து சென்றுவிடுவோம். வடக்கில் விகாரைகளை அமைக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டார்கள். பிக்குமார்கள் சிலர் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் அதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை. 'நீங்கள் தமிழ் படித்து, தமிழில் பிரித் ஓதுவதற்கு பழகிக்கொண்டு வாருங்கள். அதற்கு பின்னர் விகாரைகளை அமைக்கலாம்' என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டோம்.

எமக்கு சாதகமாக எல்லாவற்றையும் அமைத்துக்கொண்டு மீண்டுமொரு யுத்தத்துக்கு வழிசமைத்துக்கொடுக்க முடியாது. மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாதவாறு நிலைமைகளை சுமூகமாகக் கொண்டு செல்லவே நாம் முயற்சிக்கின்றோம். அவ்வாறு மீண்டும் யுத்தம் ஏற்படுமாயின் அது மிகவும் கொடூரமானதாக இருக்கும். அதனை முடிவுக்கு கொண்டு வருவதென்பது கடினமாகிவிடும்.

அதனால் எமது இளைஞர் சமுதாயம் சூழ்ச்சிகளுக்கு அகப்படாதவாறு பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு நாம் உண்மையானவர்களாகவும் நேர்மையுடனும் செயற்பட வேண்டும்.

கேள்வி:- தற்போதைய சூழ்நிலையில் யாழ். இளைஞர் சமுதாயத்தின் கடப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது? அவர்களுக்காக நீங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் எவை?

பதில்:- இளைஞர் சமுதாயமே எமக்கு முக்கியம். வயது முதிர்ந்தவர்களின் மனநிலைகளை எம்மால் மாற்ற முடியாது. அதனால் இளைஞர் யுவதிகளுடன் நாம் பாரியதொரு பயணத்தைத் தொடர்ந்து வருகின்றோம். அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும் கலாசார நடவடிக்கைகள் என பல்வேறு வேலைத்திட்டங்களையும் அவர்களுடன் இணைந்தே நாம் முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறாக எம்மால் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

இவ்வாறாக யாழ். மக்களுடன் நாம் பாரியதொரு பயணத்தை தொடர்கின்றோம். இங்குள்ளவர்களின் உடல்களில் ஓடுவது எமது இரத்தமே. ஒவ்வொரு மாதமும் எமது இராணுவத்தினர் இரத்த தானங்களை வழங்கி வருகின்றனர். இங்குள்ள மக்களும் 'எமது உடல்களில் சிங்கள இரத்தமே ஓடுகின்றது' என்றுகூட கூறுவார்கள். அந்தளவுக்கு நாம் மக்களோடு நெருங்கியுள்ளோம்.

கேள்வி:- ஊடகங்கள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்:- யாழ்ப்பாணம் தொடர்பில் எதிர்மறையான விடையங்கள் மாத்திரமே ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. இல்லாததொன்றை உருவாக்க வேண்டாம். உண்மையை எழுதுங்கள் என்றே நாம் கூறுகின்றோம். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கும் பொய்யான கருத்துக்களை எதிர்ப்பதற்கு இங்குள்ள உண்மை நிலையை ஊடகங்கள் வெளியிட வேண்டும். இதுவே இங்குள்ள மக்களுக்கு ஊடகங்கள் செய்யும் பாரிய சேவையாகும்.

தற்போது யாழ். குடாநாட்டில் அனைத்துப் பிரதேசங்களும் பொதுமக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்களும் விடுவிக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறாக எம்மால் செய்யக்கூடிய நினைக்கக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் பார்த்துப் பார்த்து செய்துவருகின்றோம்.

கேள்வி:- யாழ். மக்களுடனான இராணுவத்தின் பயணத்துக்கு சர்வதேசத்தின் வரவேற்பு எவ்வாறிருக்கின்றது?

பதில்:- உண்மையில், எம்முடைய இந்த பயணம் தொடர்பில் சர்வதேசத்துக்கு சந்தேகமே எழுந்துள்ளது. எப்படி இவ்வாறானதொரு நெருங்கிய உறவு இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ளது என அவர்கள் அடிக்கடி எம்மிடம் கேள்வி எழுப்பி வியப்புக்குள்ளாகிறார்கள். ஈராக்கிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ தங்களால் முன்னெடுக்க முடியாதவொரு காரியத்தை இலங்கை இராணுவம் எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுக்கிறது என அவர்கள் கேட்கிறார்கள்.

எமது சமூகம் மிகவும் நெருக்கமானது. பலமானது. எமக்கு பாரியதொரு வரலாறு, காலாசாரம் என்பன உண்டு. இவற்றை காசு கொடுத்து வாங்க முடியாது. அப்படியிருக்கும் போது எமக்கிடையில் எவ்வாறு பிரிவு ஏற்பட முடியும்.

நன்றி - தமிழ்மிரர்

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்