இந்நிகழ்வு கொழும்புக்கு அதிர்ச்சியையும் மன உளைச்சலையும்
ஏற்படுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடந்த வாரம் ஐரோப்பிய
நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்பாக பிரித்தானிய வெளிவிவகார
அமைச்சரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு வேண்டுகோள்
விடுத்திருந்தார்.
ஆனால் இவ் விஜயத்தை மேற்கொள் வதற்கு முன்னர் இச்
சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கப்பட்டிராத நிலையிலும் பிரித்தானிய வெளிவிவகார
அமைச்சரை சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடன் அமைச்சர் பீரிஸ் லண்டனுக்கு
விஜயம் செய்தார். ஆயினும் அவரை பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் வில்லியம்
ஹக் சந்தித்துப் பேசவில்லை.
இதனால் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாம்
பொக்ஸ், வர்த்தக முதலீட்டு அமைச்சர் லோர்ட் கிறீன், பொதுநலவாய நாடுகளில்
விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் மற்றும் பிரித்தானிய
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் பீரிஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார்.
இந் நிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்குடனான
சந்திப்பு இடம்பெறாத நிலையில் தமது உத்தியோக பூர்வ விஜயத்தை இடைநடுவில்
முடித்துக்கொண்டு தனிப்பட்ட ரீதியாக லண்டனில் தொடர்ந்து தங்கியுள்ளதாக
பீரிஸ் அறிவித்துள்ளார்.
இவரின் மகளும் பேரக்குழந்தையும் லண்டனில் வசித்து வருவதை காரணம் காட்டி
இந்த அறிவிப்பை பீரிஸ் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை லண்டனிலிருந்து அடுத்த வாரம் கொழும்பு
திரும்பவுள்ள பீரிஸ் பல உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளிலும்,
பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச
ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இலங்கைப்
படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை
மீறல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் ஆட்சியில் முன்னர் இருந்த தொழிற்கட்சி
சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு
கொன்சவேற்றிவ் கட்சி தலைமையிலான கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரும்
இப் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை பிரதமர் டேவிட் கமரூனும்
வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கும் வலியுறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர
உறவுகளில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ
மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் கையளிக்கப்படவுள்ள
நிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம்ஸ் ஹக்கை சந்தித்து
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்க பீரிஸ் முயற்சித்ததாக
கூறப்படுகிறது.