வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

03/04/2011

கிரிக்கெட் இராஜதந்திரத்தின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்காதது ஏன்? பால் தக்கரே கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 11:00.03 AM GMT ]

 

கிரிக்கெட் இராஜதந்திரத்தின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்காதது ஏன்? பால் தக்கரே கேள்வி
உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைப் பார்வையிட வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு அனுப்பி, அதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் முயற்சி செய்யாதது ஏன்? என்று சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தக்கரே கேள்வி எழுப்பியுள்ளார் .
மும்பையில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டியைக் காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்க வில்லை என்று சிவசேனா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவின் இந்தச் செயலை "புதுடில்லியின் இராஜதந்திரச் சறுக்கல்'' என சிவசேனாவின் தலைவர் பால் தக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

துடுப்பாட்ட இராஜதந்திரம் என்கிற சிறப்புச் சலுகை என ஒன்றிருந்தால், அதை இலங்கைக்கும் இந்தியா பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மன்மோகன் சிங்கின் இந்தத் துடுப்பாட்ட இராஜதந்திரம் முட்டாள்தனமானது.

இறுதி ஆட்டத்தைக் காண இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஜனாதிபதி மஹிந்த இந்தப் போட்டியைக் காண மும்பை வருவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.

அவருக்கு அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதா? அப்படி அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படாது போனால் இந்தத் துடுப்பாட்ட இராஜதந்திரம் பாகிஸ்தானுக்கு மட்டும் தானா? '' என்று பால் தாக்கரே கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ள பயன்படுத்திய கிரிக்கெட் இராஜதந்திரத்தை, இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?' என்றும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்தார்.

உலகக்கிண்ணப் போட்டிக்கு ஜனாதிபதி மஹிந்த அழையா விருந்தாளியாகவே சென்றுள்ளார் என்பது சிவசேனா தலைவரின் கூற்று மூலம் தெளிவாகிறது.

ஆயினும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கை ஒன்றில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே மஹிந்த மும்பை செல்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனாலும் யாரால் அந்த அழைப்பு அனுப்பப்பட்டது என்ற தகவல் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற முன்னரே இலங்கை அதிபர் செயலகம், மும்பைப் போட்டியின் போது சிறப்பு அழைப்பாளர்களுக்கான பிரிவில் 30 ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு சரத் பவாரிடம் கோரியிருந்தது என்று மும்மைபச் செய்திகள் கூறுகின்றன.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்