சுண்டிக்குளம் கடற்படைத் தளத்துக்குக் கொண்டுசெல்லப்பட
வேண்டிய பொருட்களும் அந்தப் படகில் ஏற்றப்பட்டிருந்தன.
வடபிராந்தியக் கடற்படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டின்
கீழ் உள்ள சுண்டிக்குளம் - சாலை கடற்படைத் தளங்களுக்கு இடையிலான தூரம்
சுமார் 7 கடல் மைல்களே.
இந்த இரண்டு இடங்களிலும் முன்னர் கடற்புலிகளின் தளங்கள்
அமைந்திருந்தன.
இரண்டே மணி நேரத்தில் அந்தப் படகு சுண்டிக்குளம்
கடற்படைத் தளத்தை அடைந்திருக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அந்தப் படகு மீளவும் சாலை கடற்படைத்
தளத்துக்கு திரும்பியிருக்க வேண்டும்.
சாலையில் இருந்து புறப்பட்ட இந்தப் படகு சுண்டிக்குளம்
கடற்படைத் தளத்தையும் அடையவில்லை.
அது மறுநாள் மீளவும் சாலையை வந்தடையவும் இல்லை.
இந்தநிலையில் கடற்படையினருக்கு சந்தேகம் எழுந்தது. கடலில்
அவர்கள் ஏதேனும் விபத்தில் சிக்கியிருக்கலாம். அல்லது இயந்திரம் பழுதடைந்து
ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதினர்.
இதனால் கிழக்கு மற்றும் வடக்கு கடற்பரப்பில் கடற்படையின்
ரோந்துப் படகுகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டன.
வான்படையின் கண்காணிப்பு விமானங்களும் தேடுதலில்
ஈடுபட்டன.
அத்துடன் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் ஊடாக இந்தத்
தகவல் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கும் அறிவிக்கப்பட்டது.
கடற்படைப் படகைத் தேடுவதற்கு உதவுமாறு அவர்களிடம்
மட்டுமன்றி, தமிழ்நாட்டு மீனவர்களிடமும் கோரிக்கை விடப்பட்டது.
29 ம் திகதி மாலை 6 மணியளவில் நான்கு கடற்படையினருடன்
சென்ற படகு காணாமல் போயிருந்த போதும் 30ம் திகதி இரவு வரை இதுபற்றிய எந்தத்
தகவல்களும் உள்நாட்டு ஊடகங்களுக்கு கசிய விடப்படவில்லை.
எந்தவொரு ஊடகத்துக்கும் இதுபற்றி கடற்படைத் தரப்பில் வாயே
திறக்கப்படவில்லை.
ஆனால் தமிழ் நாட்டு மீனவர்களிடம் இலங்கைக் கடற்படைப் படகு
காணாமல் போனது பற்றி அன்று மாலையில் இந்திய அதிகாரிகள் கூறி அவர்களை
உசார்படுத்தியிருந்தனர். இந்தியக் கடற்படையும் உசார்படுத்தப்பட்டது.
இந்தத் தகவலை பி.ரி.ஐ.செய்தி நிறுவனம் 30ம் திகதி இரவு
9.45 மணிக்கு வெளியிட்ட போதுதான் இந்த விவகாரமே வெளியே வந்தது.
ஆனாலும் பி.ரி.ஐ. செய்தியை இங்குள்ள எந்த ஊடகமும்
கவனிக்கத் தவறியதால் 31ம் திகதி காலை வெளியான எந்த நாளிதழிலும் இந்தச்
செய்தி இடம்பெறவில்லை.
31ம் திகதி காலையில் இலத்திரனியல் ஊடகங்களில் மெல்ல
மெல்ல விபரங்கள் கசியத் தொடங்கின.
அதேவேளை, வடபகுதிக் கடற்பரப்பிலும் கரையோரப் பகுதிகளிலும்
கடற்படையும் இராணுவமும் இணைந்து பாரிய தேடுதலை நடத்திக் கொண்டிருந்தன.
இந்தத் தேடுதலின் போது வெற்றிலைக்கேணிக்கு அருகே காணாமல்
போன கடற்படைப் படகை படையினர் மீட்டனர். ஆனால் அதில் நான்கு கடற்படையினரும்
இருக்கவில்லை.
அந்தப் படகுக்கு எந்தச் சேதமோ அல்லது பாதிப்போ
ஏற்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில் இந்த விவகாரத்தின் மர்மம் மேலும் தீவிரமானது.
படகு கரையொதுங்கியிருக்காது போயிருந்தால் கடலில் எங்காவது
மூழ்கியிருக்கலாம் அல்லது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றே
கருதப்பட்டிருக்கும்.
இதுபோன்ற நிகழ்வுகள் கடலில் இடம்பெறுவது வழக்கமே.
ஆனால் எந்தச் சேதமும் இல்லாமல், அதேவேளை கடற்படையினரும்
இல்லாமல் படகு கரையொதுங்கியதுதான் சந்தேகங்களை அதிகப்படுத்தியது.
இந்த நிலையில் 31ம் திகதி வியாழக்கிழமை காலை வடபகுதி
முழுவதும் கடும் இராணுவ நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது.
திடீரென வீதிகளில்இராணுவ கவச வாகனங்களும் டாங்கிகளும்
ஓடித் திரிந்தன.
பல இடங்களில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றன. வீடு வீடாகத்
தேடுதல்களும் நடத்தப்பட்டன. குடும்பப் பதிவுகள் சரி பார்க்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கில் உடுத்துறையில்
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் அழைத்து வந்த படையினர் கடுமையாக
விசாரித்தனர்.
அவர்களிடம் புதியவர்கள் யாரேனும் வந்தனரா என்று
வினாவப்பட்டது.
குடும்பப் பதிவுகள் சரிபார்க்கப்பட்டதுடன் புதியவர்கள்
யாரேனும் வந்தால் இராணுவத்தின் அனுமதியுடனேயே தங்கவைக்க வேண்டும்' என்'றும்
அறிவுறுத்தப்பட்டது.
இதேபோன்று முல்லைத்தீவில் பல பகுதிகளிலும் தேடுதல்கள்
நடத்தப்பட்டன.
வடமராட்சி கிழக்கின் கரையோரப்பகுதிகளில் இராணுவக்
கெடுபிடிகள் தீவிரமாக இருந்தன.
யாழ்.நகரிலும், வன்னியில் இரணைமடு, நெடுங்கேணி
பகுதிகளிலும், மன்னாரிலும் கூட இத்தகைய தேடுதல்கள், கெடுபிடிகள் தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டன.
போர் முடிவுக்கு வந்த பின்னர் ஒரே நாளில் வடக்கில் பல
பகுதிகளிலும் இத்தகைய பெருமெடுப்பிலான தேடுதல் நடத்தப்பட்டது இதுவே முதல்
தடவையாகும்.
படையினரின் இந்த நடவடிக்கையால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்தத் தீவிர இராணுவச் சோதனைக் கெடுபிடிகளுக்கெல்லாம்
காரணம் என்ன என்பதை படைத்தரப்பு வெளியிடவில்லை.
கடலில் காணாமல் போன கடற்படையினர் நால்வரையும் தரையில்
தேடிப்பிடிக்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் மட்டுமே உள்ளது.
கடலில் காணாமல் போன கடற்படையினர் அலையில் அடித்துச்
செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை.
அப்படியானால் அவர்கள் படகுடனேயே அடித்துச்
செல்லப்பட்டிருப்பர்.
படகு கவிழ்ந்து அதிலிருந்தவர்கள் கடலில் வீழ்ந்திருந்தால்
கூட எந்தச் சேதமும் இன்றி படகும் இயந்திரமும் கரையொதுங்கியிருக்க
வாய்ப்புகள் இல்லை.
அதேவேளை, படகு காணாமல் போன நாளில் மோசமான கொந்தளிப்புடன்
கடல் இருக்கவும் இல்லை. அப்படியானால் அவர்கள் எங்கே போயினர்?
ஒன்றில் இவர்கள் நால்வரும் தப்பிச் சென்றிருக்கலாம்.
அல்லது யாரேனும் பிடித்து அல்லது கடத்திச் சென்றிருக்கலாம் என்றே
கருதப்படுகிறது.
தப்பிச் செல்லும் எண்ணமுடைய கடற்படையினர் அதற்காக இந்தக்
கடற்பயணத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தரையில் சுலபமாகவே தப்பிக்க வழியிருக்கும் போது கடல்
வழியாகத் தப்பிச் செல்ல முடிவு செய்திருப்பாரா? என்பது சந்தேகம் தான்.
அப்படித் தப்பிச் சென்றிருந்தாலும் கரையோரம் நெடுகிலும்
அமைக்கப்பட்டுள்ள காவல்நிலைகளில் உள்ள படையினரின் கண்களில் இருந்து
தப்பித்துக் கரையேறி தெற்கே சென்றுவிட முடியாது.
அப்படியான சம்பவம் நிகழ்ந்திருந்தால் வடக்கின் கரையோரப்
பாதுகாப்பு பலவீனமாக உள்ளது என்றே அர்த்தம்.
இவர்கள் தப்பியிருக்க வாய்ப்பு இல்லையெனின்
கடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்தியக் கடல் எல்லைக்குள் இவர்களை இந்தியக் கடற்படையோ,
கடலோரக் காவல்படையோ கைது செய்திருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது.
அதனால் தான் இலங்கை அரசு முதலில் இந்த விடயத்தை வெளியே
விடுவதற்கு முன்னரே இந்தியாவுக்கு அறிவித்தது.
ஆனால் இந்தியக் கடற்படையோ, கடலோரக் காவல்படையோ அவர்களைத்
தாம் காணவே இல்லை என்ற கூறிவிட்டன.
இதையடுத்து இந்திய மீனவர்கள் மீதும் சந்தேகம் உள்ளது.
இந்திய மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில்
நீண்டகாலப் பிரச்சினைகள் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் தனியாக
மாட்டிக்கொண்ட கடற்படையினரை இந்திய மீனவர்கள் பிடித்துச் சென்றிருக்கலாமோ
என்ற சந்தேகம் இலங்கை அரசுக்கு இருப்பதாகத் தெரிகிறது.
காணாமல் போன கடற்படையினர் பற்றி அன்றைய தினம் கடலுக்குச்
சென்ற தமிழ்நாட்டு மீனவர்களிடம் இந்திய அதிகாரிகள் துருவித் துருவி
விசாரித்துளளனர்.
இது அந்தச் சந்தேகத்தின் அடிப்படையிலானதென்றே
கருதப்படுகிறது.
எவ்வாறாயினும் புலிகளின் தாக்குதல் சம்பவம் ஏதும்
நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்று அடித்துக் கூறுகிறது கடற்படை.
ஆனாலும் இத்தகைய ஒரு பின்னணியை முன்வைத்து சில இணைய
ஊடகங்கள் புரளியைக் கிளப்பி விடவே செய்தன.
ஏற்கனவே கடந்த வாரம் ஒரு செய்தி சில தமிழ் இணைய
ஊடகங்களில் வெளியாகியது.
ஹபரண காட்டில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இலங்கை
இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் 5 பேர் கொல்லப்பட்டதாக அந்தத் தகவல்
கூறியது.
இந்தச் செய்தியை பாதுகாப்பு அமைச்சும் இராணுவத்
தலைமையகமும் முற்றாக நிராகரித்தன.
புலிகள் இயக்கம் முற்றாகவே தோற்கடிக்கப்பட்டு விட்ட
நிலையிலும் அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுவதை பலரும் நிறுத்தவில்லை.
அதில் இலங்கை அரசும் உள்ளடக்கம்.
கடலில் காணாமல் போன கடற்படையினரின் விவகாரம் மர்மமாகவே
தொடர்கிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னால் உள்ள மர்மம் வெளியாகிறதோ,
இல்லையோ இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு வடக்கில் மீண்டும் ஒருமுறை போர்க்கால
கெடுபிடிகளை படைத்தரப்பு அரங்கேற்றி முடித்திருக்கிறது.
இத்தகைய போர்க்கெடுபிடிகளை நியாயப்படுத்துவதற்கு இந்தச்
சம்பவம் படைத்தரப்புக்கு வசதியாகி விட்டதென்பதை யாராலும் மறுக்கமுடியாது.
சுபத்ரா